அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தான் பா.ஜ.,வில் பதவி கிடைக்கும்: சந்தோஷ்
அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தான் பா.ஜ.,வில் பதவி கிடைக்கும்: சந்தோஷ்
ADDED : நவ 20, 2024 07:48 PM
சென்னை:'அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு தான் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்' என, தமிழக நிர்வாகிகளிடம், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., மாநில மைய குழு கூட்டம், சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் கவர்னர் தமிழிசை, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியில் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதை, பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். கூட்டணி விவகாரம் தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று கூட்டத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது. இது தொடர்பாக, கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியது தொடர்பாகவும் ஞாபகப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க.,வை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பின், டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் பேசியுள்ளதாவது:
தமிழகத்தில், 68,000 ஓட்டுச்சாவடிகள் உள்ளன; ஒவ்வொன்றுக்கும் கட்சியின் கிளை அமைப்பை உருவாக்க வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் தீவிரம் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கிளைக்கும் வரும், 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
பா.ஜ.,வில் இருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் 50 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அந்தளவுக்கு சேர்க்காதவர்களுக்கு, எந்த பொறுப்பும் வழங்கப்படாது; அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு தான் பொறுப்புகள் வழங்கப்படும். எனக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி, தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர் சேர்க்கை இல்லை என்பது. அதனால், இருக்கும் மிச்ச சொச்ச நாட்களிலாவது, தீவிரமாக களமிறங்கி பணியாற்றி, பா.ஜ.,வில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
அடுத்த முறை நான் தமிழகம் வரும்போது, யாரும் எதிர்பாராத அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையை நடத்தி இருக்கிறோம் என்று, பா.ஜ., தமிழக தலைவர்கள் பெருமையுடன் என்னிடம் கூற வேண்டும். அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
துணிச்சலாக நடக்கும் கொலைகள்
பின், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச். ராஜா அளித்த பேட்டி:
கட்சியில் கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிவடைந்ததும், மாவட்ட அமைப்புக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். ஜனவரியில் மாநில அமைப்புக்கு தேர்தல் நடக்கும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியது வரவேற்கத்தக்கது.
பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் மகன், தமிழ் படிக்கவில்லை; பிரெஞ்ச் படிக்கிறார். இப்படியெல்லாம் இருக்கும்போதும், அவர்கள் தமிழை வைத்து இரட்டை வேடம் போடுகின்றனர். தமிழ் பற்றி பேச தி.மு.க.,வுக்கு எந்த அருகதையும் இல்லை. தி.மு.க.,வில் முக்கிய தலைவர்களின் குழந்தைகள் ஹிந்தி படிக்கலாம். ஆனால், ஏழை குழந்தைகள் படிக்க கூடாது. எத்தனை காலத்துக்குத்தான் இதே மோசடிகளை தொடருவரோ.
தி.மு.க., வேடம் இனி எடுபடாது. பள்ளி குழந்தைகளின் பைகளில் ஆயுதங்கள் உள்ளன. தமிழகத்தில் தினமும் படுகொலைகள் துணிச்சலாக நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.