ஊட்டிக்கு - 6,000; கொடைக்கானலுக்கு - 4,000 வார நாளில் சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி
ஊட்டிக்கு - 6,000; கொடைக்கானலுக்கு - 4,000 வார நாளில் சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி
UPDATED : மார் 16, 2025 01:04 AM
ADDED : மார் 15, 2025 09:50 PM

சென்னை:ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தக் கட்டுப்பாடு ஏப்., முதல் ஜூன் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இந்த ஆய்வு நிறைவு பெற தாமதமாகும் என்பதால், வரும் கோடை விடுமுறையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வாகனங்களை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், வனத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.
'ஹோம்ஸ்டே'
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இயற்கை, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தவும், நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் நுழையும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். நீலகிரியில், 5,620 வணிக அறைகள், 575 உரிமம் பெற்ற, 'ஹோம்ஸ்டே' மட்டுமே உள்ளன.
அவற்றில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக, 23,000 நபர்களை மட்டுமே தங்க வைக்க முடியும். எனவே, வார நாட்களில், 6,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில், 8,000 வாகனங்களும் மட்டுமே, நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
இதேபோல, கொடைக்கானலில் வார நாட்களில், 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில், 6,000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானல் பகுதிக்குள் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பான ஆய்வு முடியும் வரை, வரும் கோடை காலத்தில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
உள்ளூர் வாகனங்கள், அரசு பணிக்காக செல்லும் வாகனங்கள், விவசாய விளை பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு, இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பொது, தனியார், சுய உதவிக்குழு மற்றும் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து, சுற்றுலா பயணியர் வசதிக்காக, மின்சாரத்தால் இயங்கும் திறந்தவெளி பஸ் மற்றும் கண்ணாடி பஸ்களை வாங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
முன்னுரிமை
அரசு பஸ்கள், ரயில்கள் வாயிலாக வரும் பயணியருக்கு, எந்த கட்டுப்பாடும் இல்லை. ஏப்., 1 முதல் ஜூன் வரை, இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானலில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், மின் வாகனங்களுக்கான, 'சார்ஜிங் பாயின்ட்'களை அமைக்க வேண்டும். சுற்றுலா பயணியருக்கு வசதியாக, மாவட்ட நிர்வாகங்கள் பொது கழிப்பறைகளை அதிகரிக்க வேண்டும்.
பொது இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தடுக்கும் வகையில், பிளாஸ்டிக் எதிர்ப்பு குறித்து பிரசாரத்தை அதிகரிக்க வேண்டும்.
இந்த வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்தவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் கூடுதல் காவல் துறையினரை பணியில் அமர்த்த தேவையான நடவடிக்கையை, டி.ஜி.பி., எடுக்க வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் மின்சார வாகனங்களுக்கு, இ- - பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை, ஏப்., 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.