கரூர் சம்பவத்தில் வெளிப்படை விசாரணை தேவை: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
கரூர் சம்பவத்தில் வெளிப்படை விசாரணை தேவை: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
ADDED : செப் 30, 2025 04:15 PM

சென்னை: தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான அதி முக்கியத்துவம் வாய்ந்த கோரமான சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால அவகாச விசாரணை அறிக்கையால் எந்தவித பயனும் ஏற்படாது என்பதால் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடல்களை வேகமாக ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்து சரியானதாக இருந்தாலும், சட்டத்தின் வழிகாட்டுதல்படி இந்த துயர சம்பவத்திற்கு ஆதாரமான உண்மை தகவல்களை அளிக்கக்கூடிய போஸ்ட்மார்ட்டம் பரிசோதனை மற்றும் ரிப்போர்ட்களில் சமரசம் இல்லாமல் தமிழக அரசு முழு கவனத்துடன் வெளிப்படை தன்மை உடன் செயல்பட வேண்டும்.
மேலும் தமிழக அரசு முதல் கட்ட விசாரணையை துரிதப்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணைக்கு முன்பாக, உடனடியாக ஐஜி அந்தஸ்தில் உள்ள ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருக்கு கீழே ஒரு டி.ஐ.ஜி குறைந்தபட்சம் மூன்று அனுபவம் வாய்ந்த டிஎஸ்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, எத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், மாவட்டக் காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்பது உள்பட
தமிழக மக்கள், முக்கிய பத்திரிகையாளர்கள் ஊடகங்கள் எழுப்பி உள்ள அனைத்து கோணங்களில் முழுமையான கள ஆய்வுடன் கூடிய விசாரணை நடத்த வேண்டும்.
மின்சார வாரியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தாசில்தார் வரை அனைவரிடமும் 41 உயிர்களை பலி கொண்ட இந்த கோர சம்பவத்திற்கான காரணங்கள், சந்தேகங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நேற்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து, ராகுல் யார் யாரிடம் என்ன பேசினார் என்பதை மரியாதைக்குரிய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும்,
தமிழக காவல்துறையும், காங்கிரஸ் தலைவர் ராகுலிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் கரூர் கோர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்றும், உள்ளூர் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக செய்யும் வகையில், உண்மைகளை தடுப்பதற்கு, நடிகர் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து ராகுல் மறைமுக முயற்சி எடுத்து வருவதை தமிழக பா.ஜ., விரைவில் அம்பலப்படுத்தும்.
நடிகர் விஜய், திமுக அரசின் எந்தவித மிரட்டலுக்கும் அடிபணியாமல், வெளிப்படுத்தன்மையுடன், தமிழக மக்களுக்கும் தன்னுடைய உயிருக்கு உயிரான ரசிகர்களுக்கும் உண்மையுடன் செயல்பட வேண்டும். தமிழக பா.ஜ., இந்த கோர சம்பவத்தின் விசாரணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் நடிகர் விஜய்க்கும், தமிழக மக்களின் எண்ணத்தின் படி உண்மைக்கும் நியாயமான விசாரணைக்கும் முழுமையாக துணை நிற்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.