ஆபரேஷன் சிந்துார் வெற்றி; அறுபடை வீடுகளில் ஆந்திரா மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு
ஆபரேஷன் சிந்துார் வெற்றி; அறுபடை வீடுகளில் ஆந்திரா மாநில எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு வழிபாடு
ADDED : மே 13, 2025 07:36 PM

தஞ்சாவூர்: ஆபரேஷன் சிந்துார் வெற்றியை தொடர்ந்து, தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடு கோவில்களில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர், பஹல்காமில், கடந்த ஏப்.22ம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.
ஆபரேஷன் சிந்துார் வெற்றிகரமாக செயல்படுத்திய இந்திய ராணுவத்தினர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இறைவன் ஆசி வழங்க வேண்டும் என வேண்டி ஆந்திரா மாநில சட்டசபை கொறடாவும், தாடேப்பள்ளிகூடெம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொலிஷெட்டி ஸ்ரீநிவாஸ் தலைமையில் 100 பெண்கள், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் தேசிய கொடியுடன் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், வழிபாடு செய்தனர். தொடர்ந்து கையில் தேசியக்கொடி ஏந்தியபடி, பாரத் மாதா கீ ஜே மற்றும் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.
இது குறித்து எம்.எல்.ஏ., பொலிஷெட்டி ஸ்ரீநிவாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் உத்தரவின் பேரில், ஆப்ரேஷன் சிந்துார் வெற்றிகரமாக செயல்படுத்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் இறைவன் அருளும், ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் என, தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில், திருப்பரகுன்றத்தில் எலமஞ்ச்சிலி எம்.எல்.ஏ. ஸ்ரீ சுந்தரபு விஜயகுமார், பழனியில், காக்கிநாடா எம்.எல்.ஏ., பந்தம் வெங்கடேஸ்வர ராவ் திருத்தணியில், திருப்பதி எம்.எல்.ஏ., ஆரணி ஸ்ரீனிவாசுலு, பழமுதிர்ச்சோலையில், ரயில்வே கோடூர் எம்.எல்.ஏ.,அரவ ஸ்ரீதர், திருச்செந்துாரில், உங்குட்டூர் எம்.எல்.ஏ., பாட்சமட்ல தர்மராஜூ, சுவாமிமலையில், தாடேபள்ளிகூடெம் எம்.எல்.ஏ., பொலிசெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகிய நான் என 6 எம்.எல்.ஏ.,க்கள் வழிபாடு நடத்தினோம் இவ்வாறு அவர் கூறினார்.