ADDED : மே 02, 2026 11:59 PM

மதுரை: ''கருத்து கணிப்புகளை பொருட்படுத்துவதில்லை,'' என பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
பா.ஜ., வேட்பாளர்களின் ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.
திருவாரூர், தஞ்சை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருப்புத்துார், மானாமதுரை, மதுரை தெற்கு, சாத்துார், ராமநாதபுரம், திருச்செந்துார், வாசுதேவநல்லுார், ராதாபுரம், நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகளின் பா.ஜ., வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், ''தே.ஜ., கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழக வளர்ச்சியை உறுதி செய்வதற்கான அரசு அமையும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும்.
''கருத்து கணிப்புகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கருத்து கணிப்பு நடத்துபவர்கள், அவர்கள் வேலையை செய்கின்றனர். நாம் நம் வேலையை பார்ப்போம். ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தே.ஜ., கூட்டணி பெறும்,'' என்றார்.
