தி.மு.க., கூட்டணியை சிதறடிப்பதே எதிர்க்கட்சிகளின் செயல் திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
தி.மு.க., கூட்டணியை சிதறடிப்பதே எதிர்க்கட்சிகளின் செயல் திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ADDED : டிச 09, 2024 06:13 AM

அவனியாபுரம் : ''தி.மு.க., கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் செயல் திட்டமாக உள்ளது'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் கூறியதாவது: வி.சி., கட்சி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. புதிதாக ஒரு கூட்டணியில் நாங்கள் இடம்பெற வேண்டிய தேவையே எழவில்லை.
வி.சி., கட்சி குறி வைக்கப்படுகிறது என்பதை விட, தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கக் கூடாது. அதனைச் சிதறடிக்க வேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் செயல் திட்டமாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ., வினரின் நோக்கம், தொடர் வெற்றி பெறும் தி.மு.க., கூட்டணி, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதுதான். கூட்டணியில் எங்களுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்கும் சூழலிலும் நாங்கள் இல்லை.
விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய், தி.மு.க., வை முதன்மை எதிரி என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நான் அரசியல் பேசாமல் நுால் வெளியீட்டு விழாவில் இருந்தால்கூட அரசியல் ஆக்கிவிடுவர். இதற்காக காத்திருப்போருக்கு தீனி போட நான் விரும்பவில்லை. நானும், விஜயும் ஒரே மேடையில் நின்றிருந்தால் அதை வைத்து அரசியல் சூதாட்டம் ஆட விரும்புவோர் தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்கிவிடுவர். அதற்கு இடம்தர நான் விரும்பவில்லை.
வி.சி.க.,வின் துணைப் பொதுச்செயலாளர்கள் 10 பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜூனா. துணை பொதுச் செயலாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் போது, உயர்நிலைக் குழுவில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக வி.சி.க.,வில் தலித் அல்லாதவர்கள் எந்தபொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமுள்ளவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு நடவடிக்கையாக கொண்டுள்ளோம்.
ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை முன்னணி தோழர்கள் தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்போம் என்றார்.