சட்டசபையில் எதிர்கட்சியினர் கேள்வி...யார் அந்த சார்? 'கைது செய்த பிறகு கேள்வி ஏன்' என முதல்வர் பதில்
சட்டசபையில் எதிர்கட்சியினர் கேள்வி...யார் அந்த சார்? 'கைது செய்த பிறகு கேள்வி ஏன்' என முதல்வர் பதில்
UPDATED : ஜன 09, 2025 01:15 AM
ADDED : ஜன 09, 2025 12:15 AM

சென்னை:அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் நேற்று ஒன்றேகால் மணி நேரம் விவாதம் நடந்தது. அதில் பேசிய எதிர்க்கட்சியினர், 'யார் அந்த சார்?' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ''சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார். அதன் பின்னரும், யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், அதற்கான ஆதாரம் இருந்தால், சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம்,'' என்றார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் நேற்று அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளால் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் மீது நடந்த விவாதம்:
புரட்சி பாரதம் - ஜெகன்மூர்த்தி: பாதுகாவலர்கள், கண்காணிப்பு கேமராவை மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்காக, பல்கலை வளாக அதிகாரி, பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், அதற்கு பொறுப்பானவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன்: பல்கலையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கவர்னர், இப்பிரச்னை தொடர்பாக வாய் திறக்க மறுக்கிறார்.
கைதான ஞானசேகரன் சொன்ன, 'யார் அந்த சார்?' என்பதைவிட, கவர்னரின் செயலில் சந்தேகம் உள்ளது.
இந்த சம்பவத்தில் பல அமைச்சர்களின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது. எனவே, உண்மையை வெளியுலகிற்கு அரசு எடுத்துக்கூற வேண்டும்.
கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: அண்ணா பல்கலையில் துணைவேந்தர் இல்லாததால், நிர்வாகம் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. குற்றவாளி யாராக இருந்தாலும், அந்த சார் கவர்னராக இருந்தாலும், கடுமையான நடவடிக்கைகளை காவல் துறை எடுக்க வேண்டும்.
ம.தி.மு.க., - சதன் திருமலைகுமார்: பல்கலையை நிர்வகிக்கும் கவர்னர், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் அல்லது அவரை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
இந்திய கம்யூ., - ராமச்சந்திரன்: பல்கலை வளாகத்திற்குள் சமூக விரோதி எப்படி வந்தான் என்பதை அறிய, தமிழக மக்கள் அதிர்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.
இதில் பலர் சம்பந்தப்பட்டு இருப்பரோ என்ற சந்தேகம் உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூ., - நாகை மாலி: தொழில்நுட்பக் கோளாறால் முதல் தகவல் அறிக்கை கசிந்தது என்று கூறுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக, தேசிய தகவல் மையத்தை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.
வி.சி.., - சிந்தனைச்செல்வன்: கவர்னரால் நிர்வகிக்க வேண்டிய வளாகம். துணைவேந்தர் இல்லாமல் பல்கலை நிர்வாகம் முடங்கிக் கிடப்பதற்கு கவர்னர்தான் காரணம். மொபைல் போனில் சொல்லப்பட்ட அந்த உரையாடலை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
பா.ஜ., - காந்தி: யார் அந்த சார் என்பதை கண்டுபிடிப்பதுடன், மாணவியருக்கு பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
பா.ம.க., - ஜி.கே.மணி: டில்லியில் நடந்த சம்பவத்தை, அண்ணா பல்கலை சம்பவம் நினைவுப்படுத்துகிறது.
குற்றவாளிக்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை: இது விஞ்ஞான யுகப்புரட்சி காலம். ஒருவர் யாருடன் பேசுகிறார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். மத்திய தொலைத்தொடர்பு துறை வாயிலாக, அதை வெளியிட வேண்டும்.
அ.தி.மு.க., - உதயகுமார்: ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்கின்றனர். 'அந்த சார் கூட கொஞ்ச நேரம் இரு' என ஞானசேகரன் மிரட்டியதாக, மாணவி புகாரில் கூறியுள்ளார். இந்த பிரச்னையில் முதல்வர் இதுவரை பதில் தரவில்லை.
ஞானசேகரன் ஏற்கனவே மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் எப்படி பல்கலை வளாகத்திற்குள் செல்ல முடியும்; சர்வ சுதந்திரமாக நடமாட முடியும் என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: பதில் சொல்ல முதல்வர் தயாராக உள்ளார். அவரை குறை கூறுவதில் நியாயமில்லை.
அமைச்சர் ரகுபதி: கடந்த 2012 முதல் 2018 வரை, ஞானசேகரன் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கைது நடவடிக்கைக்கு ஆளாக்கப்படவில்லை; நீதிமன்ற காவலுக்கும் செல்லவில்லை. இந்த ஆட்சியில், அவர் மீது எந்த வழக்கும் இல்லை.
உதயகுமார்: தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாட்களே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: சட்டத்தை மீறுபவர்கள் எல்லா இடத்திலும் இருப்பர். டில்லி, கோல்கட்டா, மும்பையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. ஏன் பொள்ளாச்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
முதல்வர் விளக்கம்
பின்னர், விவாதத்திற்கு பதிலளித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டு இருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம். அதை யாராளும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தை தவிர, தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.
குற்றம் நடந்தபின், ஒருவேளை குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது குற்றவாளியைக் காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ, அரசை நீங்கள் குறை சொல்லலாம்.
சில மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்த பின்னும், அரசை குற்றம் சொல்வது அரசியல் ஆதாயத்திற்குத்தானே தவிர, உண்மையான அக்கறையால் இல்லை.
முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக பேசுகின்றனர். அதற்கு காரணம், மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம். காவல் துறையால் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு, அந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது.
பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு இல்லை; கேமரா இல்லை என, பொத்தாம் பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கண்காணிப்பு கேமரா உதவியோடுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, 'யார் அந்த சார்' என்று கேட்கின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல், காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
விசாரணை விரைந்து மேற்கொள்ளப்பட்டு, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றம் வாயிலாக வழக்கை விரைந்து விசாரிக்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள், 'யார் அந்த சார்' என்று சொல்லி குற்றம் சாட்டுகின்றன. உண்மையாகவே அதற்கான ஆதாரம் இருந்தால், சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சென்று, எதிர்க்கட்சியினர் கொடுங்கள்; போய் சொல்லுங்கள். அதை யார் தடுக்கப் போகின்றனர்?
ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில், வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த அரசு அமைந்தது முதல், நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள்தான் அதற்கு காரணம்.
மனசாட்சி இல்லாமல், பெண் பாதுகாவலர்கள் மாதிரி பேசுபவர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்தது என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 'பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி' என்று, நான் அப்போதே சொன்னேன்.
இப்படி பெண்களுக்கு எதிராக ஆட்சி நடத்திய, 'சார்'கள் எல்லாம் இப்போது 'பேட்ஜ்' அணிந்து, சபையில் உட்கார்ந்திருந்து, பாதியிலேயே எழுந்து சென்று விட்டனர். இதுபோன்று, '100 சார்' கேள்விகளை அ.தி.மு.க.,வைப் பார்த்து, என்னால் கேட்க முடியும்.
முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் தன் பொறுப்பையும், தகுதியையும் மறந்து, பேட்ஜ் அணிந்து வந்து, அரசியலில் எந்த அளவிற்கு தாழ்ந்து போகவும் தயாராக இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
இந்த வழக்கு பற்றி, பா.ஜ.,வினர் பொதுவெளியில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். பா.ஜ., கதைகளை எல்லாம் சொல்லி, சபையின் மாண்பைக் குறைக்க விரும்பவில்லை. அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.
சபையில், 1:15 மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தில், முதல்வர் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.