'பா.ஜ., எதிர்ப்பே நமக்கு பிரதானம்; த.வெ.க.,வை கண்டுக்க வேணாம்'
'பா.ஜ., எதிர்ப்பே நமக்கு பிரதானம்; த.வெ.க.,வை கண்டுக்க வேணாம்'
UPDATED : மார் 20, 2026 01:14 AM
ADDED : மார் 20, 2026 01:13 AM

- நமது நிருபர் -
''தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., எதிர்ப்பே பிரதானமாக இருக்க வேண்டும்; த.வெ.க.,வை கண்டுகொள்ள வேண்டாம்,'' என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி தலைமை அறிவுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக, த.வெ.க., தலைவர் விஜய் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பது, அவரை வம்புக்கு இழுப்பது என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு இருந்தது. இச்சூழலை தி.மு.க., விரும்பவில்லை.
குறிப்பாக, த.வெ.க., வளர்ந்தால், அது எதிர்காலத்தில் தி.மு.க.,வுக்கு பாதகமாக வரக்கூடும் என, தி.மு.க., கருதுகிறது. எனவே, அதை தடுக்க திட்டமிட்டு, தன் தேர்தல் வியூகத்தை தி.மு.க., மாற்றியுள்ளது. அதாவது, பா.ஜ., எதிர்ப்பை மட்டும் முதன்மையாக்கி முன்னிறுத்த, அனைத்து பேச்சாளர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், தி.மு.க., வெற்றிக்கு முக்கிய காரணம், பா.ஜ.,வை எதிர்த்து நிற்கும் ஒரே கட்சி தி.மு.க., மட்டுமே என காட்டிக்கொண்டது தான். அதேநேரம், தேசிய அளவில், பா.ஜ.,வுக்கு எதிரான காங்., - கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டியதும், வெற்றிக்கு இன்னொரு காரணம்.
இந்த தேர்தலில், விஜய் புதிதாக நுழைந்துள்ளதால், சிறுபான்மையினர் ஓட்டுகளை அவர் பிரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள், பா.ஜ., எதிர்ப்பில் அடக்கி வாசித்தது, அவர்களுடனான கூட்டணி பேச்சு உள்ளிட்டவை வாயிலாக, பா.ஜ.,வை தீவிரமாக த.வெ.க.,வினர் எதிர்க்க மாட்டார்கள் என தெரியவந்துள்ளது. இதனால், த.வெ.க.,வை கண்டுகொள்ளாமல் விட்டுவிட, தி.மு.க., தலைமை தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், 'பா.ஜ., தமிழகத்தில் நுழைந்துவிட்டால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து' என்ற பிரசாரத்தை முன்னிறுத்த போகிறோம். இதனால் சிறுபான்மையினர் இடையே ஏற்படும் பதற்றம், தி.மு.க.,வுக்கு ஓட்டுகளாக மாறும். 'பா.ஜ.,விடம் அடிமையாக உள்ள அ.தி.மு.க.,' என, பிரதானமாக பிரசாரம் செய்வோம்.
மேலும், மத்திய அரசின் நிதி பகிர்வு பிரச்னை, கவர்னருடன் மோதல், கல்விக்கொள்கை மூலம் ஹிந்தி திணிப்பு என, மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகளை காப்பாற்ற, தமிழகத்தில் பா.ஜ., வரக்கூடாது என்பதை முன்வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதையே தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு கூட்டத்திலும், 'சட்டசபை தேர்தலில் டில்லி அணிக்கும், தமிழக அணிக்கும் தான் போட்டி' என, கூறி வந்தார். மொத்தத்தில் வரும் தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., என, இரு அணிகள் மட்டும் களத்தில் இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்க, தலைமை முடிவு செய்துள்ளது. அப்போது தான் சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுதையும் பெற முடியும். இந்த வியூகம், கடந்த தேர்தல்களை போலவே வரும் தேர்தலிலும் வெற்றியை தேடித்தரும். இவ்வாறு கூறினர்.

