கண்மாய் கரை சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு * தி.மு.க., கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கண்மாய் கரை சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு * தி.மு.க., கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
ADDED : மே 07, 2025 01:43 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் கண்மாய் கரையில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கவுன்சிலர் துரைப்பாண்டியன் தீக்குளிக்க முயன்றார்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் நம்ம டாய்லெட் திட்டத்தின் கீழ் பொது சுகாதார வளாகம் 2017 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.12.60 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் அனுமதி இன்றி சுகாதார வளாகம் கட்டப்பட்டதாக கூறி இடித்து அகற்ற சிவகாசி சப் கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் இடிப்பதற்கு அனுமதி கோரி தீர்மானம் வைக்கப்பட்டது. தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., கவுன்சிலர் துரைப்பாண்டியன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக 20 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேயர் சங்கீதா அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று காலை சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வருவதாக தகவலறிந்த துரைப்பாண்டி காலை 5:00 மணிக்கு சுகாதாரம் வளாகத்திற்கு வந்தார். காலை 9:00 மணிக்கு வருவாய்த் துறையினர் சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு மண் அள்ளும் இயந்திரத்துடன் வந்தனர். சுகாதார வளாகம் மீது ஏறிய துரைப்பாண்டியன் பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு கையில் தீப்பெட்டியுடன் தற்கொலை மிரட்டல் விடுத்தார். சுகாதார வளாகத்தை இடிக்கும் முடிவை கைவிட்டால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் எனக் கூறி 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
டி.எஸ்.பி., பாஸ்கர், தி.மு.க., நகர செயலாளர் உதயசூரியன், கவுன்சிலர்கள் சேதுராமன், குருசாமி, செல்வம் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி துரைப்பாண்டியை கீழே இறங்க வைத்தனர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.
துரைப்பாண்டியன் கூறுகையில், நகரில் எத்தனையோ இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதையெல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள சுகாதார வளாகத்தை இடிக்க முயல்கின்றனர். அருகிலேயே வேறு இடத்தில் சுகாதார வளாகம் கட்டிக் கொடுத்த பின்னர் இதனை இடிக்கலாம் என்றார்.

