பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எழுந்தது எதிர்ப்பு
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எழுந்தது எதிர்ப்பு
ADDED : மார் 31, 2025 12:53 AM

கோவை: அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில், இடஒதுக்கீடு குறித்த முதல்வரின் அறிவிப்புக்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
பணி நியமனம்
இதில், 'அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டம் இயற்றப்படும்' என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
அரசு துறைகளில் பணி நியமனம் என்பது, ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடாக வழங்கலாம்.
ஆனால், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது, பணிமூப்பு அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த ஒதுக்கீடு முறையில், 'ஜூனியர்' ஊழியர்கள் திடீரென சீனியர்களை தாண்டி, பதவி உயர்வு பெறுவர். இது, ஊழியர்களுக்குள் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும்.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கட்சியினரின் நிர்பந்தத்தால், தேர்தல் சமயத்தில் அவர்களை திருப்திபடுத்துவதற்காக, தமிழக முதல்வர் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பணி நியமனத்துக்கு பின், பணிபுரியும் அனைவரும் சமம் தான். அதன் பின் பணி அனுபவம், தகுதி அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க முடியும்.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், இதே போல குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதை எதிர்த்து வழக்குகளும் நடந்து வருகின்றன.
புதிய சட்டம்
இதை அமல்படுத்தினால், என்ன பாதிப்புகள் வரும் என்பது முதல்வருக்கும் தெரியும். எனவே, பதவி உயர்வு இட ஒதுக்கீடு விஷயத்தில், புதிய சட்டம் இயற்றக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.