நெல்லை, குமரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்': 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நெல்லை, குமரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்': 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : நவ 01, 2024 05:16 AM

சென்னை : வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில், 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரியில், மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல, ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நவ., 6ம் தேதி வரை இந்த நிலைமை தொடரும்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்துார், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
நீலகிரி, கோயம்புத்துார், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.