'கேட்டட் கம்யூனிட்டி' திட்டங்களில் சாலை துண்டிப்பு கூடாது என உத்தரவு
'கேட்டட் கம்யூனிட்டி' திட்டங்களில் சாலை துண்டிப்பு கூடாது என உத்தரவு
ADDED : மார் 02, 2024 01:28 AM

சென்னை: 'கேட்டட் கம்யூனிட்டி' எனப்படும், தொகுப்பு குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, அப்பகுதியில் சாலை இணைப்பை துண்டிக்க கூடாது என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியாக நிலம் வாங்கி, அதில் வீடு கட்டுவது குறைந்து அடுக்குமாடி திட்டங்கள், தொகுப்பு குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவது வெகுவாக அதிகரித்துள்ளது.
இதற்காக, 5 ஏக்கர், 10 ஏக்கர் என அதிக பரப்பளவுள்ள நிலங்கள் வாங்கப்படுகின்றன. இந்த நிலங்களில் செயல்படுத்தப்படும் குடியிருப்பு திட்டங்களில், அனைத்து பக்கமும் சுற்றுசுவர் கட்டப்படுகிறது.
அக்கம் பக்கத்தாரின் தொல்லைகள் எதுவும் இல்லாத தனித்த பகுதிகளாக இந்த குடியிருப்பு வளாகங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால், உள்ளூர் மக்கள் தொல்லை இன்றி, மக்கள் இங்கு வசிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களால், உள்ளூர் அளவில் சாலைகளின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்து உள்ள உத்தரவு:
கேட்டட் கம்யூனிட்டி என்ற பெயரில், வீடுகள், மனைகள் அடங்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, உள்ளூர் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்படுகின்றன. இதனால், அக்கம் பக்கத்து மக்கள் பிரதான சாலைக்கு செல்வதற்கான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
எனவே, பொது கட்டட விதிகளின் அடிப்படையில், பெரிய கட்டுமான திட்டங் களை செயல்படுத்தும் போது, சாலை இணைப்புகளை துண்டிக்க கூடாது.
இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது, அக்கம் பக்கத்து பகுதிகளை இணைக்கும் சாலைகள் குறுக்கிட்டால் அதற்கான இடத்தை உரிய முறையில் ஒதுக்க வேண்டும். திட்ட அனுமதி வழங்கும் நிலையில், இதை துல்லியமாக கவனிக்க வேண்டும்.
மக்கள் பயன்படுத்தும் சாலைகளின் இணைப்புகளை துண்டிக்கும் வகையில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த, மாவட்ட அலுவலர்களுக்கு நகர், ஊரமைப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

