சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுவிப்பு எதிர்த்த மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுவிப்பு எதிர்த்த மனு மீதான உத்தரவு தள்ளிவைப்பு
ADDED : ஜன 04, 2025 02:46 AM
சென்னை:சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், 2006 - -2011ம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் மனைவி, மகன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை, கடலுார் நீதிமன்றம் விசாரித்தது. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை, வழக்கில் இருந்து விடுவித்து, 2016ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், 'குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என, லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து, கடலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி' என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், லஞ்ச ஒழிப்பு துறையின், மறு ஆய்வு மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.