4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பஸ்களை அனுமதிக்க மறுத்த உத்தரவு நிறுத்திவைப்பு
4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பஸ்களை அனுமதிக்க மறுத்த உத்தரவு நிறுத்திவைப்பு
ADDED : ஜூலை 11, 2025 12:31 AM
சென்னை,:தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பஸ்களை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை, வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேல் முறையீடு
தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - எட்டூர்வட்டம், சாலைப்புதுார் - மதுரை, நாங்குநேரி - கன்னியாகுமரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பஸ்களை இயக்கியதற்காக, சுங்க கட்டண பாக்கி 276 கோடி ரூபாயை அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டும்.
இந்த நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிடக் கோரி, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நிறுவனங்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'சுங்க கட்டண பாக்கி செலுத்த நடவடிக்கை எடுக்காததால், நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக, நேற்று முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரியும், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கவும், நேற்று முன்தினம் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
அதன்படி, வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
பேச்சு
அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நிறுவனங்களுடன், போக்குவரத்து துறை செயலர் பேச்சு நடத்தி வருகிறார்.
''விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும். அதுவரை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, கப்பலுார், எட்டூர்வட்டம், சாலைப்புதுார் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக, அரசு பஸ்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என ஜூலை 8ல் பிறப்பித்த உத்தரவை, வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.