பீர் ஆலையை மூட உத்தரவு: அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை
பீர் ஆலையை மூட உத்தரவு: அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை
ADDED : ஜன 28, 2024 05:28 AM

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் பீர் ஆலைகளை மூடும்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் மற்றும் அரண்வாயல் பகுதிகளில், பீர் தயாரிக்கும் ஆலைகளை, 'யுனைடெட் புரூவரிஸ்' நிறுவனம் நடத்துகிறது.
ஆலைகளை இயக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம், 2021 மே மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதல் காலம் முடிவதற்கு முன், புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தது. அதை பரிசீலிக்காமல், வாரியம் திருப்பி அனுப்பியது.
அவசர வழக்கு
கழிவுகளை குவிப்பதில் விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி ஆலைகளை மூடும்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது. மின் இணைப்பை துண்டிக்க மின்சார வாரியத்துக்கும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், யுனைடெட் புரூவரிஸ் நிறுவனம் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவசர வழக்காக, குடியரசு தினத்தன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ''சுத்திகரிப்பு ஆலைகள் தரத்துடன் இயங்குவது உறுதி செய்யப்படும். அமோனியா, கார்பன்டை ஆக்சைடு சேமிப்புக்கு, உரிய வெப்ப நிலையை பராமரிக்க வேண்டும். மின் இணைப்பை துண்டித்தால், அமோனியா வாயு கசிவுக்கு வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
விளக்கம் கோரிய நோட்டீசுக்கு, மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவில், மனுதாரர் சமர்ப்பித்த விபரங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மீண்டும் ஆய்வு நடத்தியதில் குறைபாடுகள் கவனத்துக்கு வந்திருந்தால், மனுதாரருக்கு மேலும் சந்தர்ப்பம் அளித்திருக்க வேண்டும்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், 'சர்வர்' உடன், ஆலைகளை இரண்டு வாரங்களில் இணைப்பதாக, மனுதாரர் தரப்பில்உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆலைகளை மூடுவதற்கான காரணங்கள் நியாயமாக இல்லை. கடுமையான முறைகேடுகள், விதிமீறல்கள் இருப்பதாக தெரியவில்லை.
வேலைவாய்ப்பு
பீர் ஆலைகளில் வெளியாகும் கழிவுகளின் சுத்திகரிப்பு தன்மையை பார்க்கும்போது, ஆலைகளை சுற்றி மாசு இல்லாத நிலையை, மனுதாரரால் பராமரிக்க முடியும். 100க்கு மேற்பட்டோருக்கு, ஆலைகளில் வேலைவாய்ப்பு உள்ளது.
எனவே, பீர் ஆலைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவுக்கு, மூன்று வாரங்கள் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
ஆலைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என, மின் வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

