பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மாவட்ட வாரியாக ஆய்வு நடத்த உத்தரவு
பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மாவட்ட வாரியாக ஆய்வு நடத்த உத்தரவு
ADDED : நவ 23, 2024 02:39 AM
பருவநிலை மாற்றம், குளிர்ந்த சீதோஷ்ண நிலையால், சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. பரவுவது எந்த காய்ச்சல் என்பதை கண்டறிய மாவட்ட வாரியாக ரத்தம், சளி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், சில நாட்களாக வானிலை இயல்பு நிலையில் இல்லை. பெரும்பாலான மாவட்டங்களில், மழை பொழிவும், குளிரும் அதிகமாகி வருகின்றன. வழக்கமாக, நவ., - டிச., மாதங்களில் இது போன்ற காலநிலை மாற்றம் ஏற்பட்டாலும், காய்ச்சல் பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை முன்கூட்டியே செய்ய வேண்டும்.
நடப்பாண்டு முன்னேற்பாடு செய்திருந்த நிலையிலும், பல மாவட்டங்களில் பருவ கால நோய்த்தொற்று, சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
குறிப்பாக, மழை பெய்யும் பகுதிகளில், குளிர்ந்த சீதோஷ்ண நிலை, ஈரப்பதம் காரணமாக கொசு, வைரஸ் வாயிலாக பரவும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால், பரவுவது எந்த காய்ச்சல் என்பதை கண்டறிய மாவட்ட வாரியாக ரத்தம், சளி மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சளி, காய்ச்சலுடன், தொண்டை வலி, உடல் வலி, இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
காய்ச்சல் தடுப்பை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக, எந்த வகையான காய்ச்சல் பரவுகிறது என்பதை கண்டறியும் பணி நடக்கிறது. ரத்தம், சளி மாதிரிகளை மாவட்ட அளவில் சேகரித்து, எந்த வகையாக காய்ச்சல் என்பதை கண்டறிய அறிவுறுத்தப் பட்டுள்ளது,' என்றனர்.
விரைவில் குழு
பெரும்பாலான மாவட்டங்களில் நடந்த முதல் கட்ட ஆய்வில், இருமல், சளியுடன் கூடிய 'இன்ப்ளூயன்ஸா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட அளவில் குழு, அமைக்கப்பட்டுள்ளது போல், இன்ப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிக்கும் டாக்டர், செவிலியர் அடங்கி குழுக்களும், மாவட்ட அளவில் அமைக்கப்பட உள்ளன.
- நமது நிருபர் -