ADDED : ஜூலை 19, 2025 03:37 AM
மதுரை: திருநெல்வேலியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை கட்டடத்தை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி பெர்டின் ராயன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி பெருமாள்புரத்தில் வி.ஜெ.மருத்துவமனை கட்டடம் விதி மீறி கட்டப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று பெறவில்லை. பொதுக் கட்டடத்திற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. கட்டடத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும். கட்டடத்தை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மோகன்குமார்: அனுமதி பெற்ற பரப்பளவைவிட விதிகளை மீறி கூடுதலாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டிற்குரிய இடம் ஒதுக்கவில்லை. சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செயல்படவில்லை. ஆய்வகம் மட்டுமே செயல்படுகிறது.
தமிழக அரசு பிளீடர் திலக்குமார்: அனுமதித்ததைவிட கூடுதல் பரப்பளவில் கட்டுமானம் மேற்கொண்டதை வரன்முறைப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் சமர்ப்பித்த மனுவை அரசு நிராகரித்தது. ஏற்கனவே அனுமதித்ததன்படி கட்டடத்தை மாற்றியமைக்க அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கால அவகாசம் முடிந்துவிட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அனுமதித்த பரப்பளவைவிட விதிகளை மீறி கூடுதலாக கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்ற 8 வாரங்களில் மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் அகற்ற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

