துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட சதீஷை ஆஜர்படுத்த உத்தரவு
துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட சதீஷை ஆஜர்படுத்த உத்தரவு
ADDED : ஜன 24, 2025 02:10 AM
சென்னை:சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், 2022-ம் ஆண்டு, கல்லுாரிக்குச் செல்ல நின்றிருந்த மாணவி சத்யாவை, ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு, சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்தார்.
இந்த வழக்கில் குற்றவாளியான சதீஷுக்கு துாக்கு தண்டனை விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, கடந்தாண்டு டிச., 30ல் தீர்ப்பளித்தார். துாக்கு தண்டனையை உறுதி செய்ய, வழக்கு ஆவணங்கள், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 'வழக்கு விசாரணை தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷுக்கு நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைக்கு அவர் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சதீஷ், தனக்காக வழக்கறிஞரை வைத்துக் கொள்கிறாரா அல்லது அவருக்கு இந்த வழக்கில், இலவச சட்ட உதவி தேவையா என்பது குறித்து விளக்கமளிக்க, வரும் 29ம் தேதி, அவரை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும் என, உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

