வேட்பாளர் மீதுள்ள குற்ற வழக்கு விபரம் பத்திரிகையில் விளம்பரம் செய்ய உத்தரவு
வேட்பாளர் மீதுள்ள குற்ற வழக்கு விபரம் பத்திரிகையில் விளம்பரம் செய்ய உத்தரவு
UPDATED : மார் 21, 2024 03:28 AM
ADDED : மார் 21, 2024 02:33 AM

சென்னை:'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில், விளம்பரம் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்கு விபரங்களை, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும்.
அதேபோல், குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளும், அவற்றை வெளியிட வேண்டும்.
குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியை, ஊடகங்களில், கட்சி இணையதளத்தில், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன், இவற்றில் எது முதன்மையானதோ, அதன்படி வெளியிட வேண்டும்.
வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை, பத்திரிகை மற்றும் 'டிவி'களில், உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டும்.
இவ்விளம்பரங்கள், வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளுக்கு மறுநாள் முதல் ஓட்டுப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் வரை, மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிட வேண்டும்.
இதுகுறித்த முழு விபரங்களை, www.elections.tn.gov.in இணையதள முகவரியில் காணலாம்.

