விடுதலை கேட்ட கைதி மனு மீண்டும் பரிசீலிக்க உத்தரவு
விடுதலை கேட்ட கைதி மனு மீண்டும் பரிசீலிக்க உத்தரவு
ADDED : அக் 19, 2024 09:02 PM
சென்னை:அமைச்சரவையின் முடிவு கவர்னரை கட்டுப்படுத்தும் என்பதால், முன்கூட்டியே விடுதலை கோரிய ஆயுள் தண்டனை கைதியின் மனுவை, அரசு மீண்டும் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் வீரபாரதி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சென்னை புழல் சிறையில் உள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், 'சிறைத்துறை அதிகாரி தலைமையிலான குழுவிடம், முன்கூட்டி விடுதலை கோரி மனு அளித்தேன். அந்தக் குழுவும் பரிந்துரைத்தது. அதற்கு, தமிழக அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியதில் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முன்கூட்டியே விடுதலை கோரிய மனுவை அரசு நிராகரித்துள்ளது. அரசு உத்தரவை ரத்து செய்து, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'முன்கூட்டியே விடுதலை கோரிய விண்ணப்பத்தின் மீது, மாநில அமைச்சரவை முடிவெடுத்து கவர்னருக்கு அனுப்பி உள்ளது. அமைச்சரவையின் முடிவு கவர்னரை கட்டுப்படுத்தும். எனவே, முன்கூட்டி விடுதலை செய்ய கோரிய மனுவை நிராகரித்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை, அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.