பேரிடர் மேலாண்மை விதிப்படி அணைகளில் நீர் திறக்க உத்தரவு
பேரிடர் மேலாண்மை விதிப்படி அணைகளில் நீர் திறக்க உத்தரவு
ADDED : டிச 13, 2024 01:29 AM
சென்னை:தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணைக்கு, 2ம் தேதி நீர்வரத்து அதிகரித்தது. நள்ளிரவில் வினாடிக்கு, 1.80 லட்சம் நீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
பேரிடர் மேலாண்மை விதிகளின்படி, பருவமழை காலங்களில் அணைகளில், 1 டி.எம்.சி., அளவிற்கு நீரை காலியாக வைத்திருக்க வேண்டும்.
அதிகப்படியாக வரும் உபரிநீரை சீராக வெளியேற்றி, அணையை பாதுகாக்க வேண்டும். சாத்தனுார் அணை நிரம்பும் அளவிற்கு நீரை தேக்கி விட்டு, அதிக நீர்வரத்தால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவசரமாக அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவே பிரச்னைக்கு காரணம் என்று தெரியவந்துஉள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
எனவே, பேரிடர் மேலாண்மை விதிகளின்படி, அணையில் 1 டி.எம்.சி., காலியாக இருக்கும் வகையில், நீர் திறக்க செயற்பொறியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, நீர்வளத்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

