ADDED : ஜூலை 31, 2025 01:42 AM
மதுரை: தமிழகம் முழுதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிக்கொடிக் கம்பங்களை அகற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மா.கம்யூ., மாநிலச் செயலர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, 'இந்த வழக்கில் கருத்து தெரிவிக்க விரும்பும் கட்சிகள், ஆக., 5க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம்' என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'அரசியல் கட்சிகள் சட்டப்பூர்வமாக கொடிக் கம்பங்களை நிறுவுகின்றன. உயர் நீதிமன்றத்தின் தடையால், த.வெ.க., கடும் பாதிப்பை சந்திக்கிறது.
'எனவே, கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் த.வெ.க.,வையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்.