அறநிலையத்துறை காலண்டர் விற்ற தொகையை தனியார் அச்சகத்திற்கு நேரடியாக அனுப்ப உத்தரவு
அறநிலையத்துறை காலண்டர் விற்ற தொகையை தனியார் அச்சகத்திற்கு நேரடியாக அனுப்ப உத்தரவு
ADDED : ஜன 11, 2025 10:28 PM
முக்கிய கோவில்கள் சார்பில், ஆண்டுதோறும் தனித்தனியே மாத காலண்டர் அச்சடிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதோடு, அறநிலையத்துறை சார்பிலும் தனியாக காலண்டர் அச்சடிக்கப்பட்டு, விற்பதற்காக அனைத்து கோவில்களுக்கும் அனுப்பப்படுகிறது.
அறநிலையத்துறை சார்பில், 120 ரூபாய், 350 ரூபாய்க்கு ஆயிரக்கணக்கான காலண்டர்கள் இந்தாண்டு அச்சடிக்கப்பட்டு, கோவில்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வாய்மொழி உத்தரவு
இதில், 350 ரூபாய்க்கு விற்கப்படும் காலண்டரில், 50 ரூபாயை கோவில் நிர்வாகம் எடுத்துக் கொண்டு, 300 ரூபாயை காலண்டர் அச்சடித்த சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தனியார் அச்சகத்திற்கு நேரடியாக அனுப்ப வேண்டும் என, வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளாக, இந்த அச்சகத்தில் தான் அறநிலையத்துறை தொடர்பான நிகழ்ச்சிகள், காலண்டர் போன்றவை அச்சடிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் அறநிலையத்துறை சார்பில் பதிப்பக பிரிவு இருக்கிறது.
தணிக்கை ஆய்வு
கோவில் ஊழியர்கள் கூறியதாவது:
தனியார் அச்சகத்தில் இருந்து பெற்று, அனைத்து கோவில்களுக்கும் காலண்டர் அனுப்பி உள்ளனர்.
காலண்டர் விற்ற தொகையை அறநிலையத்துறைக்கு தானே அனுப்ப வேண்டும். ஆனால், அச்சகத்திற்கே அனுப்புமாறு கூறுகின்றனர்.
வலுக்கட்டாயமாக காலண்டர்களை தேவைக்கு அதிகமாக அச்சிட செய்து, 'லாபம்' பார்க்க அனுப்பியுள்ளனர்.
அறநிலையத்துறை வழியாக தொகையை செலுத்தினால், அது தணிக்கை ஆய்வின்போது பிரச்னையாகி விடும் என்பதால், நேரடியாக அனுப்புமாறு கூறுகின்றனர். இது முறைகேட்டிற்கு வழிவகுக்கும்.
இவ்வாறு கூறினர்.
- நமது நிருபர் -