ADDED : மார் 01, 2024 06:46 AM
மதுரை : திருச்சி சமயபுரம் கோயில் யானை மசினியை முதுமலை தெப்பக்காட்டில் வனத்துறை தொடர்ந்து பராமரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சென்னை அந்தோணி கிளைமன்ட் ரூபின் 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
முதுமலை வனப்பகுதி அருகே கருகுடியில் மசினி யானை 2007 ல் பிறந்தது. அதை தாய் யானை கைவிட்டதால், வனத்துறையினர் மீட்டு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016ல் மசினி யானையை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
மன அழுத்தம், உடல் ரீதியான மாற்றங்களால் 2018 மே 25ல் யானை பாகனை மசினி மிதித்து கொன்றது. அருகில் வேறு கோயிலுக்கு மசினியை மாற்றி, பராமரிக்கின்றனர். மசினியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதை மீண்டும் முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு மாற்றி, சுதந்திரமாக உலாவவிட்டால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.தனபால் அமர்வு விசாரித்தது.
கோயில் தரப்பு: மசினி தற்போது முதுமலை தெப்பக்காட்டில் பராமரிக்கப்படுகிறது. இதற்காக வனத்துறைக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம். மசினியை எங்களிடம் ஒப்படைக்குமாறு உரிமை கோரமாட்டோம். இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள்: யானையை வனத்துறை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அவ்வப்போது கால்நடை டாக்டர்கள் பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

