ADDED : மே 30, 2025 12:09 AM
சென்னை:கட்சி நன்கொடை குறித்து, தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி, த.மா.கா., சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், தாங்கள் பெறும் நன்கொடை குறித்த விபரங்களை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் தேர்தல் கமிஷனிடம், அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
'நோட்டீஸ்'
அவ்வாறு செய்தால் மட்டுமே, அந்த நன்கொடைக்கு வருமானவரி விலக்கு வழங்கப்படும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், கடந்த 2018 - 19 மற்றும் 2019 - -20ம் நிதியாண்டுகளில், நன்கொடை அறிக்கை, தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்த இரண்டு நிதியாண்டுகளுக்கும், வருமான வரி விலக்கு வழங்க மறுத்த வருமான வரித்துறை, முறையே, 66.76 லட்சம், 1.07 கோடி ரூபாய் செலுத்தும்படி 'நோட்டீஸ்' அனுப்பியது.
தாமதமாக அளித்த அறிக்கையை ஏற்க கோரி, த.மா.கா., சார்பில், கடந்த மார்ச் 20 தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், தாமதத்தை ஏற்க முடியாது என, தேர்தல் கமிஷன் கடந்த 13ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை ரத்து செய்து, நன்கொடை குறித்த அறிக்கையை ஏற்க உத்தரவிடக் கோரி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'கடந்த 2018 - -19ம் ஆண்டு, எந்த அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்வது என்ற குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டது. அதேபோல், கடந்த 2019 - -20ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஏற்பட்டது.
விசாரணை
'இந்த இரு நிதியாண்டும் முறையாக வருமானவரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, மனுவுக்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை, ஜூன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.