விடுப்பு எடுக்காமல் பணியை தொடர போக்குவரத்து ஊழியருக்கு உத்தரவு
விடுப்பு எடுக்காமல் பணியை தொடர போக்குவரத்து ஊழியருக்கு உத்தரவு
ADDED : ஜன 12, 2024 01:08 AM
திருப்பூர்:'பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவங்க உள்ள நிலையில் தொடர் விடுப்பு எடுக்காமல் பணியை தொடர வேண்டும்' என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக மாநிலம் முழுவதும் 19,484 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ் இயக்கத்துக்கு உதவும் வகையில் 'இயக்க மற்றும் கண்காணிப்பு குழு பணி வழங்கப்பட்டுள்ள அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர் விடுப்பு இல்லாமல் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
டிரைவர் நடத்துனர் தொழில்நுட்ப பணியாளர் அவசர விடுப்பு தவிர பிற விடுப்புகளுக்கு ஜன. 17ம் தேதி வரை அனுமதியில்லை' என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜன. 9, 10ம் தேதி பஸ் ஸ்டிரைக்கால் விடுப்பு எடுத்த பலர் நேற்று (11ம் தேதி) காலை பணிக்கு திரும்பினர். பஸ்கள் இயக்கம் அனைத்து கோட்டங்களிலும் சீராகி விட்டது. பொங்கல் பஸ் இயக்கத்தில் எந்த இடையூறுகளும் இருக்காது; இன்று இரவு முதலே நள்ளிரவு அதிகாலையில் வழக்கமான பஸ்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம் முழுமையாக இருக்கும்' என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

