ADDED : ஆக 05, 2025 04:37 AM
சென்னை: நம் நாளிதழ் செய்தியை அடுத்து, மின்கம்பி உள்ளிட்ட மின் வினியோக சாதனங்களை கொள்முதல் செய்து இருப்பு வைக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரிய தலைவர் ராதா கிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் மின்கம்பி உள்ளிட்ட மின்வினியோக சாதனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், புதிய மின் இணைப்பு வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நம் நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை விரிவாக செய்தி வெளியானது. இதுகுறித்து, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் ராதா கிருஷ்ணன், இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் நேற்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, மின் கம்பி, மீட்டர், கம்பம் உள்ளிட்ட மின் வினியோக சாதனங்களை விரைவாக கொள்முதல் செய்து, அலுவலகங்களில் இருப்பு வைக்குமாறும், விரைவில் மழைக்காலம் துவங்குவதால் மின் சாதனங்கள் ஒரு மாவட்டத்தில் இல்லை என்றால், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வாங்கி பணிகளை மேற்கொள்ளுமாறும், தெரிவித்தார்.
'நான் நேரடியாக களத்திற்கு சென்று, பணியாளர்களிடம் தகவல்களை கேட்கிறேன். என்னிடம் தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது. மின் தடை தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.