ராஜாஜி நினைவு இல்லம் சேதம் பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
ராஜாஜி நினைவு இல்லம் சேதம் பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஆக 05, 2025 04:37 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள, முன்னாள் முதல்வர் ராஜாஜியின் நினைவு இல்லம் சேதமாகி உள்ளதால், அதை பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில், 1878 டிசம்பர், 10ல் பிறந்தவர் ராஜாஜி.
தமிழக முதல்வர், மேற்கு வங்க கவர்னர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். 'பாரத ரத்னா' விருது பெற்றவர். 1972 டிசம்பர், 25ல் இறந்தார்.
அவரது நினைவை போற்றும் வகையில், தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக, தமிழக அரசு பராமரிக்கிறது.
சில ஆண்டுகளாக, ராஜாஜி இல்லத்தின் ஓடுகள் சேதமாகின. சீரமைக்காததால் மழைக்காலங்களில் இல்லத்துக்குள் தண்ணீர் ஒழுகுகிறது.
இதனால், ராஜாஜியின் பல அரிய புகைப்பட தொகுப்பு வீணாகும் அபாயம் உருவாகியுள்ளது.
மழை தண்ணீர் ஒழுகாமல் இருக்க, சேதமான ஓடுகளின் மீது தார்ப்பாயால் மூடியுள்ளனர். ஆனால், கனமழையின் போது தண்ணீர் ஒழுகுகிறது.
ஏற்கனவே, தொரப்பள்ளியில் ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்டும் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காத நிலையில், அவரது இல்லமும் வீணாகி வருவதாக பொது மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
எனவே, அதை பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.