ADDED : ஜன 29, 2025 11:56 PM
மதுரை:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் குளத்தைச் சுற்றிலும் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற தாக்கலான வழக்கில், மனுதாரரின் மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கும்பகோணம் கண்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் கட்டுப்பாட்டில் மகாமகம் குளம் உள்ளது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக பெருவிழா நடைபெறும். பக்தர்கள் புனித நீராடுவர்.
தினமும் வெளிமாநில பக்தர்கள் குளத்தை காண வருகின்றனர்.குளத்தை சுற்றிலும் நான்கு புறமும் கரைகளை சிலர் ஆக்கிரமித்து, நான்கு சக்கர வண்டிகள் மூலம் கடைகள் நடத்துகின்றனர்; துரித, அசைவ உணவுகளை விற்பனை செய்கின்றனர்.
மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சாப்பிட வருவோர் கைகளை கழுவும் நீர் மற்றும் கடைக்காரர்கள் பாத்திரங்களை சுத்தம் செய்யும் நீர், படித்துறைகளில் விடப்படுகின்றன.
இதனால் குளம் மாசடைந்து புனிதத் தன்மை பாதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி, கலெக்டர், கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனருக்கு மனு அனுப்பினேன்.பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்து, மனுவை அதிகாரிகள் பரிசீலித்து, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர்.

