கடற்கரை மேலாண்மை திட்டம் மாநில அளவில் தயாரிக்க உத்தரவு
கடற்கரை மேலாண்மை திட்டம் மாநில அளவில் தயாரிக்க உத்தரவு
ADDED : செப் 04, 2026 02:58 AM
சென்னை: 'தமிழக கடலோர பகுதி முழுவதற்கும் கடற்கரை மேலாண்மை திட்டத்தை தயாரிக்க வேண்டும்' என, கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில், கடற்கரை பகுதிகளில் கடலரிப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த, வனத்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடலரிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அதற்கான தீர்வை காணும் வகையில், கடற்கரை மேலாண்மை திட்டத்தை உருவாக்க, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் வாயிலாக, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து, சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழும கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடற்கரை மேலாண்மை திட்ட தயாரிப்பு குறித்து, தேசிய கடற்கரை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் விவரித்தனர்.
தமிழக கடலோர பகுதியில், 69 இடங்களில் கடலரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, அதில், 20 இடங்களில் அதிக வாய்ப்புள்ளதாக, தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில், அவசர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் கடலரிப்பு பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதை மையமாக வைத்து, கடற்கரை மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக கடலோர பகுதி முழுவதற்குமாக, இத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என, இக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக, இத்திட்டம் இருக்க வேண்டும் என்றும், குழும கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
