விரல் ரேகை பதிவாகாதவர்களுக்கு கருவிழி சரிபார்ப்பு வாயிலாக பொங்கல் பரிசு வழங்க உத்தரவு
விரல் ரேகை பதிவாகாதவர்களுக்கு கருவிழி சரிபார்ப்பு வாயிலாக பொங்கல் பரிசு வழங்க உத்தரவு
ADDED : ஜன 13, 2026 02:11 AM

சென்னை: ரேஷன் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவாகவில்லை எனில், கண் கருவிழி சரிபார்ப்பு வாயிலாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குமாறு, கடை ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய பரிசு தொகுப்பை அரசு வழங்குகிறது. இவற்றின் வினியோகம், ரேஷன் கடைகளில், இம்மாதம், 8ம் தேதி முதல் துவங்கியது.
அதன்படி, ரேஷன் கார்டுதாரர்களின் விரல் ரேகை, கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., எனப்படும் விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்பட்டு, 'ஆதார்' சரிபார்ப்பு வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் படுகிறது.
சில கார்டுதாரர்களின் குறிப்பாக, முதியவர்களின் விரல் ரேகை பதிவு செய்யும்போது, ஒப்புதல் பெற தாமதம் ஏற்படுகிறது.
இதனால், அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபரத்தை, ரேஷன் கடை ஊழியர்கள், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.
எனவே, கார்டுதாரர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டால், கண் கருவிழி ரேகை கருவியை பயன்படுத்தி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குமாறு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டு உள்ளது.

