தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை
தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை
ADDED : டிச 20, 2024 12:29 AM
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவற்றை, 'டெண்டர்' கோரி தனியார் நிறுவனங்களிடம் இருந்து, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.
60,000 டன்
அதன்படி, 60,000 டன் துவரம் பருப்பு, 6 கோடி லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் வாங்க, கடந்த 10ம் தேதி டெண்டர் நடந்தது. அதில், பருப்பு டெண்டருக்கு, 17 நிறுவனங்களும், பாமாயிலுக்கு ஒன்பது நிறுவனங்களும் பங்கேற்றன.
இந்த டெண்டரில் தர பரிசோதனையில் முதலில் தேர்வாகாத சில நிறுவனங்களிடம், விதிகளுக்கு மாறாக பருப்பு, பாமாயில் வாங்க ஆணை வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விதிப்படி டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களின் பொருட்கள் தரமானதா என்பதை கண்டறிய, மாதிரி கொடுக்க வேண்டும்.
அதை நிறுவனங்களின் பெயரை குறிப்பிடாமல், குறியீட்டு எண் அடிப்படையில், வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவு, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வ கங்களில் வழங்கி தர பரிசோதனை செய்யும்.
அதில் தேர்வாகும் நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் மட்டுமே, டெண்டரில் தேர்வு செய்யப்படும். குறைந்த விலைப்புள்ளி வழங்கும் நிறுவனங்களுக்கு, கொள்முதல் ஆணை வழங்கப்படும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு ரேஷனில் வழங்க, 640 கோடி ரூபாய்க்கு பருப்பும், 584 கோடி ரூபாய்க்கு பாமாயிலும் வாங்கப்பட உள்ளன.
இதற்காக, தற்போது நடத்தப்பட்ட டெண்டரில், துவரம் பருப்புக்கு மாதிரி வழங்கியதில் ஆறு நிறுவனங்கள் மற்றும் பாமாயிலுக்கு மாதிரி வழங்கியதில், மூன்று நிறுவனங்களின் பொருட்கள் தரமற்றவை என, ஆய்வகத்தால் நிராகரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
டெண்டர் விதிமீறல்
விதிப்படி, அந்நிறுவனங்களின் விலைப் புள்ளியை திறக்காமல், டெண்டரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
ஆனால், துறையின் உயர் மட்டத்தினரின் நெருக்கடியால், நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மாதிரியை மறு பகுப்பாய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. சட்டப்படி அது தவறான செயல்; டெண்டர் விதிமீறல்.
மறு பகுப்பாய்வில், அந்த மாதிரிகள் தரமானவை என தேர்வு செய்யப்பட்டதால், விதிக்கு மாறாக டெண்டரில் அந்நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டன.
இரு நிறுவனங்களுக்கு தலா, 15,000 டன்; ஒரு நிறுவனத்திற்கு, 12,000 டன்; மற்றொரு நிறுவனத்திற்கு, 18,000 டன் பருப்பு வாங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு நிறுவனங்களில் இரு நிறுவனங்களின் மாதிரிகள், முதலில் நடந்த தர பரிசோதனையில் தேர்வாகவில்லை; சட்டத்திற்கு விரோதமாக, அவற்றுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, 6 கோடி லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் வாங்க, டெண்டர் கோரியதில் நான்கு நிறுவனங்களிடம், 4 கோடி பாக்கெட் பாமாயில் வாங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களும் துறையின் உயர்மட்டத்திற்கு வேண்டியவை என்பதால், தர பரிசோதனையில் சலுகை காட்டப்பட்டுள்ளது.
நெருக்கடி
மற்ற நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வாயிலாக, கிலோ பருப்பு, 112.65 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 146.50 ரூபாய்க்கும் வாங்க, அவசரகதியில் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தர பரிசோதனையில் தேர்வாகாத நிறுவனங்கள், ரேஷன் கடைகளுக்கு தரமான பருப்பு, பாமாயிலை வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்தும், தர பரிசோதனையில் முதலில் தேர்வாகாமல், மீண்டும் பகுப்பாய்வு செய்ய அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தது யார் என்பது குறித்தும், முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டால் முறைகேடுகள் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.