ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 17, 2025 04:28 PM

திண்டுக்கல்: டில்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில், வெளிநாட்டு பணத்தை சென்னை சென்று மாற்றி வந்த இளைஞர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.13.76 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே போலீசார் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த கன்னியாகுமரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 44) போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார்.
இதனையடுத்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 13 லட்சத்து 76 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை செய்த போது அவர் வெளிநாட்டு பணத்தை சென்னை சென்று மாற்றியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், ரூ.13 லட்சத்து 76 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.