ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீட்டில் முறைகேடு தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
ஓ.எஸ்.ஆர்., ஒதுக்கீட்டில் முறைகேடு தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
ADDED : பிப் 13, 2024 12:08 AM
சென்னை: புதிதாக மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி நிலங்களை, மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஒதுக்குவதை கட்டாயமாக்கி, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் புதிய மனைத்திட்டங்களை உருவாக்குவோர், நிலத்தின் மொத்த பரப்பளவில், 10 சதவீத நிலத்தை திறந்தவெளி பயன்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். நகரமைப்பு சட்ட விதிகளின்படி, எந்தெந்த இடங்களில் சாலை, பூங்கா உள்ளிட்ட வசதிகள் வர வேண்டும் என்பதை, அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால், இதற்கு வரைவு வரைபடம் என்ற பெயரில், விண்ணப்பதாரர் தாக்கல் செய்யும் வரைபடங்கள் பெரும்பாலும் ஏற்கப்படுவதில்லை.
நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வும் முறையாக அங்கீகாரம் வழங்கிய மனைப்பிரிவுகளில், ஓ.எஸ்.ஆர்., நில ஒதுக்கீட்டில், தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
மனைப்பிரிவுகளில், விதிகளின்படி, 10 சதவீத நிலத்தை ஒதுக்கி விட்டோம் என்று, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், அதிகாரிகள் பரிந்துரைத்த இடங்களை தவிர்த்து, மிக குறுகலான சந்துகளில், திறந்தவெளி நிலம் ஒதுக்கப்படுகிறது.
இன்னும் சில இடங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளில், சிறிய பாகங்களாக திறந்தவெளி நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலங்களில் பூங்கா அமைக்க முடிவதில்லை; அப்படியே அமைத்தாலும், பொதுமக்கள் வந்து செல்ல முடிவதில்லை.
இதுகுறித்து புகார்கள் வருவதால், சாலைகளை ஒட்டிய பகுதிகளில், மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், ஓ.எஸ்.ஆர்., நிலம் ஒதுக்குவதை கட்டாயமாக்கும் வகையில், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள், புதிய கட்டுப்பாடுகளை வகுத்து வருகின்றனர். அந்த கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.