நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2,000 கோடி மற்ற துறை அமைச்சர்களும் எதிர்பார்ப்பு
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2,000 கோடி மற்ற துறை அமைச்சர்களும் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 27, 2026 07:06 AM

சென்னை: நெடுஞ்சாலைத்துறைக்கு சிறப்பு அனுமதி அளித்து, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியதுபோல், தங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் என, மற்ற துறை அமைச்சர்கள், நிதித்துறைக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறையின் கீழ், 66,000 கி.மீ., சாலைகள் உள்ளன. இவற்றை பராமரிக்க, புதிதாக சாலைகள், பாலங்கள் அமைக்க, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியில் கோட்ட வாரியாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 2025 - 26ம் ஆண்டு ஒதுக்கிய நிதியில், பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. சட்டசபை தேர்தலை ஒட்டி, மாநிலம் முழுதும், நிலுவையில் உள்ள பணிகளை, 2026 - 27ம் ஆண்டில் முடிக்க, முன் கூட்டியே, 2,000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்க, நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, நெடு ஞ் சாலைத்துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டு, 'டெண்டர்' பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கியது போல், தங்களுக்கும் முன்கூட்டியே நிதி ஒதுக்க வேண்டும் என, பல துறைகளில் இருந்தும், நிதித்துறைக்கு நெருக்கடி வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, நிதித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் வர உள்ளதால், சாலைகளை சீரமைக்கும்படி, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நிறைவேற்ற, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
நிதித்துறையில் ரிசர்வ் வைத்திருந்த பணத்தில் இருந்து, அடுத்த நிதியாண்டில் சாலைகளை சீரமைக்க, இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, மற்ற துறை அமைச்சர்களும், இதுபோல் நிதி வேண்டும் என கேட்பது, நெருக்கடியை அளித்துள்ளது. இது குறித்து, அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

