மூன்று கவுன்சிலர்கள் பதவி பறிப்பு நடவடிக்கையால் மற்றவர்கள் கலக்கம்
மூன்று கவுன்சிலர்கள் பதவி பறிப்பு நடவடிக்கையால் மற்றவர்கள் கலக்கம்
ADDED : மார் 29, 2025 02:32 AM

தன்னிச்சையான நடவடிக்கை, அதிகாரிகள் மீது பாய்ச்சல் என, சென்னையில் ஆட்டம் போட்ட, தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர் உட்பட மூன்று பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தங்கள் மீதும் நடவடிக்கை பாயுமோ என மற்ற கவுன்சிலர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. இதில் அதிக கமிஷன் கேட்டு பணிகளை நிறுத்தியது, ஒப்பந்த ஊழியர்கள் மீது தாகக்குதல், அதிகாரிகளை மிரட்டுதல் என, பல்வேறு புகார்கள் முதல்வர் வரை சென்றன.
இவ்வாறு புகாரில் சிக்கிய, திருவொற்றியூர், மணலி, அம்பத்துார், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி மண்டலங்களைச் சேர்ந்த, 13 கவுன்சிலர்களுக்கு, 'உங்கள் பதவியை ஏன் பறிக்கக்கூடாது' என விளக்கம் கேட்டு, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு, கவுன்சிலர்கள் விளக்கம் அளித்தனர். அமைச்சர் நேருவும், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைத்து எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் கவுன்சிலர்கள் பலர், தொடர்ந்து அட்டாகசம் செய்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, திருவொற்றியூர் மண்டலத்தில், ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், பெருங்குடி மண்டலத்தில், 189 வார்டு கவுன்சிலர் பாபு ஆகிய இருவரும், நேற்று முன்தினம், கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கி, அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதில் சொக்கலிங்கம், தற்போதைய திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி.சங்கரின் சகோதரர். அதேபோல், தாம்பரம் மாநகராட்சியில், மூன்றாவது மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்பும் நீக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆட்டம்போட்ட கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்படுவது வழக்கம். தி.மு.க.,வில் அதுபோன்ற நடவடிக்கை பெரிதாக எடுக்கப்படுவதில்லை.
தற்போது, அதிரடியாக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதை, அக்கட்சியினரே எதிர்பார்க்காத ஒன்றுதான்.
இதனால், தற்போது வரை வார்டுகளில் கொட்டம் அடித்து வரும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பலரும், தங்கள் மீது நடவடிக்கை பாயுமோ என்று கலக்கம் அடைந்துள்ளனர்.

