ADDED : ஜூன் 04, 2025 10:31 PM
சென்னை:தமிழக தகவல் ஆணையத்தின் ஆர்.டி.ஐ., இணையதளத்தில், தகவல் பெற விரும்புவோர், எளிதாக விண்ணப்பிக்க, ஓ.டி.பி., முறையை, மாநில தகவல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் 2025ன் படி, பொதுமக்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து தகவல்களை பெறுவதற்காக, rtionline.tn.gov.in என்ற இணையதளம், மாநில தகவல் ஆணையத்தால் துவக்கப்பட்டுள்ளது. இதில், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை மட்டும் செலுத்தி, எளிதாக உள்ளே நுழையும் வசதி இருந்தது.
இதை பயன்படுத்தி, சமூக விரோதிகள், மற்றவர்கள் பெயரில் மனு செய்யும் சூழல் இருந்தது. இதனால், உண்மையில் தகவல் கேட்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது.
இதை தடுக்க, இணையதளத்தில் உள்நுழைவோர், மின்னஞ்சலுடன் கடவுச்சொல் அல்லது ஓ.டி.பி., பயன்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆர்.டி.ஐ., சீரமைப்பு குழு கோரிக்கை வைத்தது.
அதை ஏற்று, தற்போது, ஆர்.டி.ஐ., இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் மனுவினை பதிவிடும் போது, ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் அதாவது ஓ.டி.பி., பதிவிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஐந்து இலக்க ஓ.டி.பி., எண்ணை உள்ளிட்டால் தான், விண்ணப்பதாரர்கள் உள் நுழைய முடியும். இந்த வசதியினால், பிற நபர்கள் பெயரில், தகவல் பெறுவது தடுக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.