சிறுபான்மையின நலனுக்கு பாடுபட்டது எங்கள் அரசு: பழனிசாமி பேச்சு
சிறுபான்மையின நலனுக்கு பாடுபட்டது எங்கள் அரசு: பழனிசாமி பேச்சு
ADDED : ஆக 01, 2025 05:01 AM

ராமநாதபுரம்: ' 'தி.மு.க., ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது, 16 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றும் கச்சத்தீவை மீட்க தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை. மீனவர்கள் மீது அக்கறை உள்ளவர் போல முதல்வர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
பிரசார சுற்றுப்பயணத்துக்காக ராமநாதபுரம் வந்த அவர், மக்கள் மத்தியில் பேசியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுவிற்பனையில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனம் போன்று அவர்களது குடும்பத்தினர் மட்டுமே தலைமை பதவிக்கு வருகின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் எல் லாமே ஊழல் தான்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அதன்பின், பா.ஜ., - காங்., என தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் பங்கேற்ற தி.மு.க.,வினர் அப்போது, கச்சத்தீவை மீட்க குரல் கொடுக்கவில்லை.
தற்போது, 2026 சட்டசபை தேர்தலுக்காக மீனவர் மீது அக்கறை உள்ளது போல, முதல்வர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
மீனவர்கள் பிரச்னைக்கு காரணம் மத்திய அரசு என பழி போடுவது சரியல்ல. ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி, ஹஜ் புனித பயணத்திற்கு நிதியுதவி என சிறுபான்மையினர் நலனுக்காக, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம்.
மதம், ஜாதியின் பெயரில் கலவரத்தை துாண்டுகின்றனர். சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளது போல தி.மு.க.,வினர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
எங்களை பொறுத்தமட்டில் ஆண், பெண் என்ற இரண்டே ஜாதிதான், அ.தி.மு.க., ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டக் கட்சி.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.