ADDED : பிப் 05, 2025 02:42 AM

சென்னை:துபாய், ரஷிதியா பகுதியில் உள்ள பிரைட் லர்னர்ஸ் பள்ளி வளாகத்தில் சமீபத்தில் களரி உலக சாம்பியன்ஷிப் - 2025 போட்டி நடந்தது. இந்த போட்டியை துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் உலக களரி கூட்டமைப்பு மற்றும் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் வல்லுனநர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின.
இந்த போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த 125க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஓப்பன் உலக சாம்பியன்ஷிப் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதில் சென்னை மெட்ராஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சிறப்பாக விளையாடி 14 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தனர்.
சென்னையை சேர்ந்த ஹரிணி, சுமிதா மேரி, ரக் ஷணா, நிதின், தமிழ்முகில், நிக் ஷிந்த், கவுதமன், ஆந்திராவை சேர்ந்த ஷீனா ஸ்ரீ ராஜ், கோவையை சேர்ந்த ராகவன், ராக் ஷணா, தர்ஷன், துவாரகேஷ், ரேவந்த் குமார் நாயுடு, விருதுநகரை சேர்ந்த சுகராஜ் உள்ளிட்ட இந்திய அணியினர் மொத்தம் 26 தங்கப் பதக்கங்கள் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.
எட்டு நாடுகளின் வீரர்களை ஒன்று திரட்டி இந்திய பாரம்பரிய போர்க்கலைகளை உலகளவில் பிரபலப்படுத்த சிறந்த முயற்சியாக அமைந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.