ADDED : மார் 10, 2024 11:45 PM
கோவை : அவசரத்துக்கு உதவ வேண்டிய போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால், புகார் அளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காவல்துறையை எளிதில் அணுக அவசர உதவி எண், 100 ஏற்படுத்தப்பட்டது. துவக்கத்தில், அந்தந்த மாவட்டம், மாநகரங்களில் இதற்கான கட்டுப்பாட்டு அறை இருந்தது. பின், ஒருங்கிணைந்த அவசரகால கட்டுப்பாட்டு அறை, சென்னை காவல்துறை தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு புகார்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட பகுதி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன் நடந்த மகா சிவராத்திரி விழாவின் போது, வெள்ளிங்கிரி மலை, ஈஷா யோகா மையம் ஆகிய பகுதிகளில், ஒரே நாளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடினர்.
அப்போது பலரும் தங்கள் பொருட்களை தவற விட்டனர். புகார் அளிக்க பலரும் நம்பிக்கையுடன் காவல் துறையின் அவசர உதவி எண், 100க்கு தொடர்பு கொண்டனர். பெரும்பாலானோருக்கு இணைப்பு கிடைக்கவில்லை. நேற்று மாலை வரை இப்பிரச்னை இருந்தது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''அவசர உதவி எண், 100 செயல்பாடுகள் சென்னையில் உள்ளது. பொதுமக்கள் தரப்பில் எவ்வித புகாரும் வரவில்லை. உடனடியாக இதுகுறித்து சோதித்து, சென்னைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

