சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு கோர்ட்டுக்கு வெளியே சமரசம்
சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு கோர்ட்டுக்கு வெளியே சமரசம்
ADDED : ஜூன் 24, 2025 06:27 AM
சென்னை : நடிகர் சிவாஜியின் 'அன்னை இல்லம்' வீடு ஜப்தி உத்தரவு ரத்தை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர், ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர்.
இந்நிறுவனம், ஜகஜால கில்லாடி என்ற பட தயாரிப்புக்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 3.75 கோடி ரூபாய் கடன் பெற்றது.
அதை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9.02 கோடி ரூபாய் செலுத்த ஏதுவாக, சென்னை தி.நகரில் உள்ள, நடிகர் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில், தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால், அவரது வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில், கடன் பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டு விட்டதால், இந்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்று, மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.