ஊரகப்பகுதியில் கைவிடப்படும் அவுட்சோர்சிங்: ஊழியர்கள் பாதிப்பு
ஊரகப்பகுதியில் கைவிடப்படும் அவுட்சோர்சிங்: ஊழியர்கள் பாதிப்பு
ADDED : ஜன 27, 2025 11:54 PM
விருதுநகர் : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளின் பதவி காலம் ஜன., 5 முடிந்த நிலையில் ஊராட்சி தலைவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் ஆள்பற்றாக்குறையை தவிர்க்க அவுட்சோர்சிங்கில் நியமிக்கப்பட்ட துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்களை பணியில் இருந்து நிற்க தனி அலுவலர்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சிகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் துாய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி., ஆப்பரேட்டர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டியிருந்தது. 2011ல் அரசால் நியமிக்கப்பட்டவர்களே நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். அதற்கு பிறகு இத்தகைய பணிநியமனம் நடக்கவில்லை. நிரந்தர ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் புதிய நபர்களும் நியமிக்கப்படவில்லை.
இதனால் ஓரிரு நபர்களை வைத்து துாய்மை, குடிநீர் வினியோக பணிகளை செய்து வந்தனர். ஊராட்சி தலைவர்கள் 2019க்கு பின் பொறுப்பேற்றதும் மக்கள் தொகையை கணக்கில் வைத்து அவுட்சோர்சிங் மூலம் 10 முதல் 20 பேர் வரை துாய்மை காவலர்களாகவும், 5 முதல் 10 பேர் வரை ஓ.எச்.டி., ஆபரேட்டர்களாவும் நியமித்தனர்.
அடிப்படை வசதிகள் எந்த சிக்கலுமின்றி மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி வந்தனர்.
இந்நிலையில் ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிந்ததும், அவுட்சோர்சிங் ஊழியர்களை பணியில் இருந்து நின்று விட தனி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் திண்டாடுகின்றனர்.
மேலும் ஊராட்சிகளில் குப்பை அள்ளவும், குடிநீர் வினியோகத்திலும் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு அவுட்சோர்சிங் ஊழியர்களை தொடர்ந்து பணிபுரிய உள்ளாட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

