கட்டட அனுமதி பணியில் 'அவுட்சோர்சிங்'; உள்ளாட்சிகளில் திரைமறைவு நடவடிக்கை
கட்டட அனுமதி பணியில் 'அவுட்சோர்சிங்'; உள்ளாட்சிகளில் திரைமறைவு நடவடிக்கை
ADDED : மார் 24, 2025 05:26 AM

சென்னை : மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகள், ரகசியமான முறையில் வெளிநபர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறைகள் குறித்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதில், 3,500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, தானியங்கி முறையில் ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ஒப்புதல் பெற, பொது மக்கள் பொறியாளர்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை முடித்து, 30 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், நகரமைப்பு திட்டமிடல் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில், கட்டுமான பிரிவில், பட்டம் பெறாத பொறியாளர்களே பணியில் உள்ளனர்.
அவர்களால், கட்டட அனுமதி கோப்புகளை, முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, அவர்கள் ரகசியமான முறையில் வெளியாட்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பாலமுருகன் கூறியதாவது:
தற்போதைய நடைமுறைகளின்படி, பொறியாளர்கள் வாயிலாக, பொதுமக்கள், 'ஆன்லைன்' முறையில் வரைபடம், விண்ணப்பங்களை தாக்கல் செய்கின்றனர். இந்த விண்ணப்பங்களுக்கு, பதிவு எண் வழங்குவதுடன், அதிகாரிகள் ஒதுங்கி விடுகின்றனர்.
அதன்பிறகு, ஆன்லைன் முறையில் இருக்கும் ஆவணங்களை, வெளியாட்கள் ஆய்வு செய்து, அதிகாரிகளின் பெயரில், குறிப்புகளை எழுதுகின்றனர். இதற்காக ஒரு கோப்புக்கு 1,000 முதல், 3,000 ரூபாய் வரை, வெளியாட்களுக்கு அதிகாரிகள் பணம் கொடுக்கின்றனர்.
வெளியாட்கள் எழுதி கொடுக்கும் கோப்புகள் அடிப்படையில், விண்ணப்பதாரரிடம் கட்டணம் வசூலித்து, இறுதி ஆணைகளை அதிகாரிகள் பிறப்பிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வரைபடம், ஆவணங்களில் சந்தேகம் எழுந்தால், வெளியாட்கள் நேரடியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு விசாரிக்கின்றனர்.
அந்தந்த துறைகளில் தகுதியான பொறியாளர்கள் இல்லை என்பதால், இப்படி அதிகாரப்பூர்வமற்ற முறையில், அவுட்சோர்சிங் செய்வது நல்லதல்ல. தேவைப்பட்டால் அரசே பொறியாளர்களை பணி அமர்த்த வேண்டும்.
இல்லையெனில், அரசின் அனுமதியுடன், அதிகாரப்பூர்வமான முறையில் வெளியாட்களை பயன்படுத்தும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி கோப்புகளை, வெளியாட்கள் கையாள எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது உறுதியானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.