களப்பணியாளர் பற்றாக்குறையால் நில அளவை துறையில் 'அவுட் சோர்சிங்'
களப்பணியாளர் பற்றாக்குறையால் நில அளவை துறையில் 'அவுட் சோர்சிங்'
ADDED : பிப் 17, 2024 12:20 AM
சென்னை:நில அளவைத் துறையில், களப்பணியாளர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, 'அவுட் சோர்சிங்' முறைக்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நில அளவைத் துறையானது, சென்னை, கோவை, திருச்சி, மதுரை என, நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், குறுவட்ட அளவிலும், தாலுகா அளவிலும், நில அளவைப் பணிக்கு ஆய்வாளர்கள் முதல் பல்வேறு நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
இவர்கள் கள அளவில், நில அளவைப் பணிகளை மேற்கொள்ள கள பணியாளர்கள் தேவை. இதற்கு, மண்டல அளவில், களப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
ஆரம்பத்தில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் களப் பணியாளர்கள், துறை ரீதியாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த இடங்களுக்கு உயர்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய எண்ணிக்கையில் களப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், துறையில் நில அளவைப் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நில அளவைத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில அளவைப் பணிக்கு தேவையான எண்ணிக்கை யில் களப் பணியாளர்கள் இல்லை. இதனால், வழக்கமான பணிகளை விரைந்து முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, தனித்தனியாக களப் பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறைக்கு மாற்றாக, 'அவுட் சோர்சிங்' முறைக்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, சென்னை, கோவை மண்டலங்களில் உள்ள அலுவலகங்களுக்கு, 11 மாத ஒப்பந்த அடிப்படையில் களப் பணியாளர்களை அனுப்பும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
ஓரிரு மாதங்களில் வெளி நிறுவனங்களின் வாயிலாக தேவையான எண்ணிக்கையில் களப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.