விஜய் குறித்து ஓவியா விமர்சனம் த.வெ.க.,வினர் எரிச்சல்
விஜய் குறித்து ஓவியா விமர்சனம் த.வெ.க.,வினர் எரிச்சல்
ADDED : அக் 27, 2025 12:42 AM

சென்னை: 'த.வெ.க., தலைவர் விஜய் செயல்பாடுகள் குறித்து, தொடர்ந்து விமர்சித்து வரும் நடிகை ஓவியா, கரூர் மக்களை விட நடிகையர் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மீது உங்களுக்கு பாசம் அதிகமாக இருக்கிறதா' என கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீப காலமாக நடிகை ஓவியா, அரசியல் ரீதியான விமர்சனங்களில் ஈடுபட்டு வருகிறார்.
செப்., 27ம் தேதி கரூரில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் பங்கேற்ற கூட்டத்தில், 41 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து, சமூக வலைதளத்தில் தன் கருத்துகளை பதிவிட்டிருந்தார். 'இச்சம்பவம் தொடர்பாக விஜயை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஓவியாவின் நேற்றைய பதிவு, விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க.,வினரிடம் புயலை கிளப்பி உள்ளது.
ஓவியாவின் பதிவில், 'நடிகை திரிஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அவர் வீட்டிற்கு செல்கிறீர்கள்; நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் சென்றீர்கள்.
'ஆனால், கரூருக்கு போக மட்டும் தயங்கினீர்கள். அப்படியானால், கரூர் மக்களை விட, திரிஷா, கீர்த்தி சுரேஷ் மீது உங்களுக்கு அதிக பாசம் இருக்கிறதா?' என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால், ஓவியாவை, த.வெ.க.,வினர் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நடிகை ஓவியா பெயரை போலியாக பயன்படுத்தி சிலர், சமூக வலைதளங்களில் விஜயை கடுமையாக விமர்சித்து வருவதாக த.வெ.க.,வினர் கூறுகின்றனர்.

