மினி பஸ்கள் இயக்கும் துாரம் அதிகரிக்க ஓனர்கள் கோரிக்கை
மினி பஸ்கள் இயக்கும் துாரம் அதிகரிக்க ஓனர்கள் கோரிக்கை
ADDED : நவ 14, 2024 11:46 PM
சென்னை:'அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தால், தனியார் மினி பஸ்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, மினி பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள துாரத்தை அதிகரிக்க வேண்டும்' என, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில், தற்போது 2,950 தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
புதிய மாற்றம்
மினி பஸ்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், மினி பஸ் திட்டத்தில், அரசு புதிய மாற்றங்களை செய்து வரைவு அறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள், பொதுமக்கள், மினி பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம், கடந்த ஜூலையில் கருத்து கேட்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரைவு அறிக்கையில், 25 கி.மீ., வரை மினி பஸ்கள் இயக்கலாம். அதில், 30 சதவீதம், ஏற்கனவே உள்ள வழித்தடங்களிலும், 70 சதவீத கி.மீ., துாரத்தை புதிய வழித்தடங்களிலும் இயக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே மினி பஸ்களை இயக்கி வருவோர், 'புதிய திட்டத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கொடியரசன் கூறியதாவது:
குக்கிராமங்களுக்கும் இணைப்பு வசதி தரும் மினி பஸ் திட்டத்தை விரிவுபடுத்தும் இத்திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், ஏற்கனவே உள்ள மினி பஸ் உரிமையாளர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
டீசல் விலை, உதிரி பொருட்கள் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தில் மினி பஸ்களை இயக்கி வருகிறோம். அரசு டவுன் பஸ்களில், மகளிர் இலவச பயண திட்டத்தால், மினி பஸ்கள் பெரிய அளவில் நஷ்டத்தில் இயக்கப்படுகின்றன.
வழித்தடம்
இதனால், தமிழகத்தில் உரிமம் பெற்ற மினி பஸ்கள் எண்ணிக்கை, 7,500ல் இருந்து 2,940 ஆக குறைந்துள்ளது.
தற்போது, அரசு நகர பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் 4 கி.மீ.,க்கு மட்டுமே தனியார் மினி பஸ்களை இயக்கலாம் என்று இருப்பதை, 15 கி.மீ., வரையாக அதிகரிக்க வேண்டும்.
அப்போது தான், கிராமங்களில் இருந்து முக்கிய பஸ், ரயில் நிலையங்கள், மார்க்கெட், கல்வி நிறுவனங்களை, மினி பஸ்களால் இணைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.