ADDED : டிச 24, 2024 03:32 AM

சென்னை : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி' சார்பில், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்க உள்ள 48வது சென்னை புத்தகக்காட்சியில், அருணன், நெல்லை ஜெயந்தா, சுரேஷ்குமார் இந்திரஜித் உள்ளிட்டோருக்கு, கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் 27ம் தேதி முதல் ஜன., 12ம் தேதி வரை நடக்கும் புத்தகக்காட்சியை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்க உள்ளார். தினமும் பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கும்.
விடுமுறை நாட்களில் காலை 11:00 மணிக்கு துவங்கும். பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 ரூபாய்.
இதுகுறித்து, பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், செயலர் முருகன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் நேற்று அளித்த பேட்டி:
ஒவ்வொரு ஆண்டும், கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படும். இந்தாண்டு, உரைநடைக்கு அருணன், கவிதைக்கு நெல்லை ஜெயந்தா, நாவலுக்கு சுரேஷ்குமார் இந்திரஜித், சிறுகதைகளுக்கு என்.ஸ்ரீராம், நாடகத்துக்கு கலைராணி, மொழிபெயர்ப்புக்கு நிர்மால்யா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
அதேபோல், பதிப்பகத்துக்கு கற்பகம், நுாலகருக்கு கோதண்டராமன், புத்தக விற்பனையாளருக்கு பெல் கோ, குழந்தை எழுத்தாளருக்கு ஜோதி சுந்தரேசன், தமிழறிஞருக்கு சபா.அருணாச்சலம், பெண் எழுத்தாளருக்கு பர்வீன் சுல்தானா, அறிவியல் எழுத்தாளருக்கு சங்கரசரவணன், கவிதை இலக்கியத்துக்கு பொன்.மாணிக்கம், தன்னம்பிக்கை எழுத்தாளருக்கு மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பபாசி விருது பெற உள்ளனர்.
நிறைவு நாள் நிகழ்ச்சியில், நீதிபதி மகாதேவன் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.