பெரியார் பஸ் நிலைய கடைகளுக்கு பேக்கேஜ் டெண்டர்: அமைச்சர்
பெரியார் பஸ் நிலைய கடைகளுக்கு பேக்கேஜ் டெண்டர்: அமைச்சர்
ADDED : மார் 26, 2025 02:24 AM
சென்னை:''மதுரை பெரியார் பஸ் நிலைய வணிக வளாகம் கட்டப்பட்ட பகுதிக்கு, 3 அடி நீள பாதை தான் உள்ளது. இதனால், கடைகளை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது 'பேக்கேஜ்' முறையில், டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில் விவாதம்:
அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா: 'ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அவ்வாறு இணைக்கப்படும் பகுதிகளில், ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நிதி வழங்காது. எனவே, அதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும்.
துாய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் நேரு: தமிழகத்தில், 40,000க்கு மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக, வாக்குறுதி அளிக்கவில்லை. அவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என, வாக்குறுதி அளித்து உள்ளோம்.
ராஜன் செல்லப்பா: மதுரை பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட வணிக வளாகம், எப்போது பயன்பாட்டுக்கு வரும்.
அமைச்சர் தியாகராஜன்: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், எந்தெந்த பணிகள் செய்யக்கூடாதோ, அவை செய்யப்பட்டுள்ளன. வணிக வளாகம் கட்டப்பட்ட பகுதிக்கு, 3 அடி நீள பாதை தான் உள்ளது. இதனால், கடைகளை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது 'பேக்கேஜ்' முறையில், டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜன் செல்லப்பா: சொத்துவரி முதல் குப்பை வரி வரை உயர்த்தப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு, கடப்பாரை எடுத்துச் செல்கின்றனர். வீட்டின் முன் குப்பையை கொட்டுகின்றனர்.
அமைச்சர் நேரு: மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் வரி விதிப்பு குறைவாகவே உள்ளது. காரைக்குடியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவ்வாறு நடந்து கொண்ட இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.