கடலில் மிதக்கும் கஞ்சா பொட்டலங்கள் * இதுவரை 66 கிலோ சிக்கின
கடலில் மிதக்கும் கஞ்சா பொட்டலங்கள் * இதுவரை 66 கிலோ சிக்கின
ADDED : அக் 12, 2025 03:24 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்ட கடலில் மிதந்த கஞ்சா பொட்டலங்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இதுவரை ரூ.60 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போலீசாரின் கெடுபிடிகளையும் மீறி கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது. இம்மாவட்ட கடலோரப்பகுதி இலங்கைக்கு அருகில் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. ஆந்திரா, ஓடிசா போன்ற மாநிலங்களில் இருந்தும் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கஞ்சா விளைச்சல் இருப்பதால் கடத்தல்காரர்கள் அங்கிருந்தும் கடத்தி வந்து ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இரு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தேவிபட்டினம், மோர்ப்பண்ணை உள்ளிட்ட பகுதி கடலில் கஞ்சா மூடைகள் மிதந்தன. மோர்பண்ணையில் இருந்து மீனவர்கள் அக்.,8 இரவு மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் 8 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்த போது ஆங்காங்கே மூடைகள் மிதந்ததை கண்டனர். அவற்றை மீட்க அச்சமடைந்து மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் படகுகளில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதி போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மண்டபம் கடலோர காவல் படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாசிபட்டினம் கடற்கரையில் எஸ்.பி.பட்டினம் போலீசார் 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இரவு மோர்பண்ணை கடற்கரையில் மரைன் போலீசார் 34 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், நேற்று மண்டபம் கடலோர காவல்படையினர் உப்பூர் அருகே கடற்கரையில் 14 கிலோ பொட்டலங்களையும் கைப்பற்றினர். பலத்த காற்று வீசும் நிலையில் கஞ்சா பொட்டலங்கள் ஒவ்வொன்றும் கடற்கரை கிராமங்களிலும் கரை ஒதுங்குகின்றன.
போலீசார் கூறியதாவது: இதுவரை மூன்று கடற்கரை பகுதியில் ஒதுங்கிய ரூ.60 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றபட்டுள்ளது. இவை இலங்கைக்கு கடத்த இருந்தவை. இவற்றை கடலில் போட்டார்களை விசாரித்து வருகிறோம். கடலோர பகுதி கிராம மக்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
-