தமிழகத்தில் அரிசி விலை உயராது; நெல், அரிசி வணிகர்கள் உறுதி
தமிழகத்தில் அரிசி விலை உயராது; நெல், அரிசி வணிகர்கள் உறுதி
ADDED : நவ 05, 2024 12:05 AM

சென்னை : 'நாட்டில் நெல் விளைச்சல் நன்றாக இருப்பதால், தமிழகத்தில் அரிசி விலை உயராது' என, நெல், அரிசி வணிகர்கள் தெரிவித்துஉள்ளனர்.
தமிழகத்தின் அரிசி தேவை, ஆண்டுக்கு, 91 லட்சம் டன். அதில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, 70 - 71 லட்சம் டன் அரிசி கிடைக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து, ஆண்டுக்கு 30 லட்சம் டன் அரிசி வருகிறது. இதனால், தமிழக தேவையை விட, கூடுதலாக அரிசி கிடைக்கிறது.
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்து, அரிசி விலை உயர்ந்தது.
மத்திய அரசு, பாசுமதி அல்லாத உயர் சன்ன ரக அரிசி ஏற்றுமதிக்கு, கடந்த ஆண்டு தடை விதித்தது. புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு, 20 சதவீதம் வரி விதித்தது.
நடப்பாண்டில் மழைப்பொழிவு நன்றாக இருந்தது. இதனால், நெல் சாகுபடியில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, புழுங்கல் அரிசிக்கு இருந்த, 10 சதவீத ஏற்றுமதி வரி, சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. எனவே, அரிசி விலை உயராது என்று வணிகர்கள் தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன செயலர் மோகன் கூறியதாவது:
மழை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டு நாட்டின் அரிசி உற்பத்தி, 3.70 சதவீதம் குறைந்தது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், நெல் விளைச்சல் சிறப்பாக உள்ளது. அரிசி உற்பத்தி, 13.80 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் டிசம்பரில் நெல் அறுவடை துவங்க உள்ளது. இதனால், அரிசி வரத்து மேலும் அதிகம் இருக்கும். அரிசி இருப்பும் போதிய அளவு உள்ளது.
தற்போது, 'சூப்பர் பைன்' ரகத்தில் இடம் பெறும் சோனா மசூரி, வெள்ளை பொன்னி அரிசி கிலோ, 62 - 64 ரூபாய்க்கும், 'பைன்' ரகத்தில் வரும் அதிசய பொன்னி, ஐ.ஆர்., 20 ஆகியவை கிலோ, 58 - 60 ரூபாய்க்கும், 'கோர்ஸ்' ரகத்தில் இடம் பெறும் மோட்டா வகை அரிசி, 48 - 50 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
கடந்த நான்கு மாதங்களாக இதே விலை தான் உள்ளது. உபரியாக உள்ள அரிசியை ஏற்றுமதி செய்வதால், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும். இதனால் தான், மத்திய அரசு அரிசி ஏற்றுமதி வரியை ரத்து செய்துள்ளது. எனவே, அரிசி விலை உயர வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

